நாடாளுமன்றத்திற்குள் பொதுமக்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் நீக்கப்படவுள்ளன.
அதன்படி நாளை முதல் நாடாளுமன்றத்தின் பொது காட்சியகம் திறக்கப்படும் என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொரோனா சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடாளுமன்றத்தை பார்வையிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து, கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டியதன் அவசியம் குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இதன்படி நாடாளுமன்றத்தின் பொது காட்சியகம் நாளை திறக்கப்படும் என்பதுடன், அமர்வு இல்லாத நாட்களில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நாடாளுமன்றத்தை பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிகாரிகள் www.parliament.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை பார்வையிட விண்ணப்பிக்கலாம் மற்றும் 011 2 777 473 அல்லது 335 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் ஒன்றை அனுப்புவதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் நாடாளுமன்றத்தை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் பல்கலைக்கழக மாணவர் குழுக்கள், அரச பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இதே வசதியை வழங்க முடியும் என நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.