நாட்டில் மட்டுமன்றி, நாடாளுமன்றத்தில்கூட கருத்துக்களை வெளியிடுவதை நசுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், பதின்மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான உரிமையைகூட அரசாங்கம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதற்கான தந்திரோபாயங்கள் தொடர்பிலேயே இன்று நாடாளுமன்றத்தில் பிரதான விவாதம் இடம்பெற்றது என்றும் குறித்த விடயம் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது சிந்தனையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது யோசனையால் அரசாங்கம் அச்சமடைந்திருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிப்படை உரிமையான பேச்சுரிமை மீறப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகள் பற்றிப் பேசி பயனில்லை என்றும் இது நாடாளுமன்றத்தின் ஜனநாயகத்தை முற்றிலும் சீர்குலைக்கும் செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாட்டிலும் சர்வதேச அளவிலும் மிகவும் வலுவான கருத்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.