பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 12(1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.
சிபாரிசுக்கு ஏற்றவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் முரண்பாடுகள் நிறுத்தப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக இறக்குமதி செய்து பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பெட்ரோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பெட்ரோலிய இறக்குமதிக்கு முறையாக அடையாளம் காணப்பட்ட தரப்பினர்களுக்கு உரிமம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றன.
இன்று இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபன திருத்தச் சட்டமூலம் மற்றும் சிவில் விமான சேவைகள் சட்டத்தின் கீழான உத்தரவுகள் விவாதத்தின் பின்னர் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளை திருத்துவது தொடர்பான பரிந்துரைகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.