திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொல்லியல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே, அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இதனை குறிப்பிட்டார்.
திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் காணிகள் அபகரிக்கப்பட்டு புதிய வியாபாரத்தளங்கள் அமைக்கப்படுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை முன்வைத்தார்.
இதன்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் காணியை கொண்டிருந்த திருக்கோணேஸ்வரம் இன்று 18 ஏக்கர் காணியை மாத்திரமே கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
காசிக்கும், திருப்பதிக்கும் செல்கின்ற அரசியல்வாதிகள் அதே சிவபெருமான் வீற்றிருக்கும் திருகோணேஸ்வர காணியை அபகரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.
இந்த தெய்வ நிந்தனையே நாடு வீழ்ச்சி நிலைக்கு செல்கின்றமைக்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதில் வழங்கி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், விதுர விக்கிரமநாயக்க, நாடு இன்னும் பிரிந்து செயற்படுவதாக குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரும் தம்முடைய தனிப்பட்ட நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுகின்றனர் என்றும் ஒவ்வொருவரும் வரலாறுகளை தெரிவிக்கின்றனர் என்றும் எனினும் வரலாறுகளை பற்றி சிந்திக்காமல், நடைமுறையை பற்றி சிந்திக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அகழ்வாராட்சி விஞ்ஞானமாகும் என்றும் எனவே, தற்போது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக விரைவில் திருகோணமலைக்குச் சென்று ஆலய நிர்வாகத்தினருடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.