அரசியலமைப்பு திருத்தம் என்ற போர்வையில் நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் பிரேரணைகளை கொண்டு வந்தால் 22வது அரசியலமைப்பு திருத்தம் தோற்கடிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மொரவௌ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாளை(06) மற்றும் நாளை மறுதினம் விவாதிக்கப்படவுள்ள 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் குழுநிலை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னர், பல்வேறு புதிய திருத்தங்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட மாற்றங்களைத் தவிர்த்து, புதிய திருத்தங்களை முன்வைப்பது பொருத்தமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு பிரச்சினைக்கு உள்ளாகியுள்ள இவ்வேளையில் சந்தர்ப்பவாதிகள் தாம் விரும்பியவாறு நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு இடமளிப்பது துரோகம் எனவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்;.