தெற்கு உக்ரைனில் உள்ள ஸபோரிஸியா நகரில், ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 17பேர் உயிரிழந்துள்ளதோடு 12க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் நகர மையப் பகுதியில் 7 ஏவுகணைகள் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல்களின் போது, முக்கிய வீதியில் உள்ள 5 மாடி குடியிருப்பு கட்டடம் தரை மட்டமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸபோரிஷியா நகரத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஏவுகணைத் தாக்குதல்களில் 20 தனி வீடுகள் மற்றும் 50 குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்தன. பல தளங்களைக் கொண்ட கட்டடம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. தாக்குதலில் காயமடைந்த சுமார் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே கார்கீவ் பிராந்தியத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றிய குப்யான்ஸ்க் நகரை மீட்டு உக்ரைன் இராணுவம் முயன்ற போது ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் இராணுவ வீரர்கள் 220 பேர் உயிரிழந்தாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீப கற்ப பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதற்கு பிறகு 2018ஆம் ஆண்டு ரஷ்யாவையும் கிரீமியாவையும் இணைக்க கெர்ச் ஜலசந்தியில் 19 கி.மீ. தொலைவுக்கு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல 4 வழிச் வீதியும், இரட்டை ரயில் பாதையும் உள்ளன. நடுவில் கப்பல்கள் கடந்து செல்ல தூக்கு பாலம் வசதியும் உள்ளது.
கடந்த 8ஆம் திகதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லொரி பாலத்தில் வெடித்துச் சிதறியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. சரக்கு ரயிலின் 7 எரிபொருள் டேங்கர்கள் எரிந்து நாசமாகின.
சேதமடைந்த பாலத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரை வழிநடத்த ஜெனரல் செர்ஜி சுரோவிகின் என்ற புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கிரீமியா பாலம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.