கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தொடர்பான விசாரணைகள் நாளை இடம்பெறவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரதிவாதிகள் பலர், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் வார இறுதியில் தமக்கு கிடைத்ததாகத் தெரிவித்தனர்.
எனவே, அவற்றை ஆய்வு செய்து உண்மைகளை முன்வைக்க சிறிது காலம் வழங்குமாறும்அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதன்படி, மனு மீதான பரிசீலனையை நாளை வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படும் எனத் தகவல் கிடைத்தும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.