உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்களை குறிவைத்த ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களால், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 64பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைனின் அரச அவசர சேவை தெரிவித்துள்ளது.
முதல் முறையாக கிவ்வின் மையத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது உட்பட 14 பிராந்தியங்களில் நேற்று (திங்கட்கிழமை) தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன்போது 83 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் அதில் 43க்கும் மேற்பட்டவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் கூறுகிறது.
எல்விவ், கார்கிவ், டினிப்ரோ மற்றும் சபோரிஸியா நகரங்கள் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள், பல மாதங்களாக உக்ரைன் கண்டிராத மோசமான தாக்கங்களில் அடங்கும்.
எரிசக்தி உட்கட்டமைப்பில் ஏவுகணைகள் தாக்கியதால் பல பகுதிகள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் பறிதவிக்கின்றன.
குழந்தைகள் விளையாட்டு மைதானம், பல்கலைக்கழகம் மற்றும் பிரபலமான தாராஸ் ஷெவ்சென்கோ பூங்கா உள்ளிட்ட பொதுமக்களின் பகுதிகளை ரஷ்யா குறிவைத்ததாகத் தோன்றியதாக தலைநகர் கிவ்வில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.
ரஷ்யாவை கிரிமியாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தில் சனிக்கிழமை வெடிப்பு சம்பவம் நடந்ததற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடந்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறினார்.