மலேசிய நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவதாக பிரதமர் சாப்ரி யாகூப் அறிவித்துள்ளார்.
இதனால், நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக சாப்ரி யாகூப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதற்கான அனுமதியை கோரினேன். அதற்கு மன்னரும் சம்மதித்துவிட்டார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தி மக்களின் தீர்க்கமான தீர்ப்பைப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துடன் சேர்த்து, மாகாண பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்’ என கூறினார்.
இன்னும் ஒரு வாரத்துக்குள் தேர்தல் ஆணையம் கூடி, தேர்தலுக்கான திகதியை முடிவு செய்யும். மலேசிய சட்டப்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் பருவமழைக் காலம் அது என்பதால், தேர்தல் முன்கூட்டியே நடத்த எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றன.