உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு மாவட்டங்களில் மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதால் முபெண்டே மற்றும் அதன் அண்டை மாவட்டமான கசாண்டாவில் உள்ள மதுபானக்கூடங்கள், இரவு விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் மூடப்படும்.
அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டாலும், சரக்கு லொரிகள் மாவட்டத்திற்குள் நுழையவும், வெளியேறவும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, எபோலா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பாரம்பரிய மருத்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முந்தைய தொற்றுப்பரவலின்போது, பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க அவர்கள் காரணமாக இருந்தனர்.
தற்போது பரவிவரும் எபோலா வைரஸின் சூடான் திரிபுக்கு எதிராக ஒப்புதல் பெற்ற தடுப்பூசிகள் ஏதும் இல்லை. 2013 முதல் 2016வரையான காலகட்டத்தில் மேற்கு ஆபிரிக்கா முழுவதும் 11,000 பேரைக் கொன்ற சயர் திரிபிற்கு மட்டுமே தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.
ரத்தம், எச்சில் போன்ற உடல் திரவங்கள் அல்லது அசுத்தமான பொருட்களுடன் நேரடி தொடர்புகொள்வது மூலம் ஒருவருக்கு எபோலா பரவுகிறது. வாந்தி, வயிற்றுப்போக்கு, உள் அல்லது வெளிப்புற இரத்தப்போக்கு ஆகியவை அதன் அறிகுறிகளாகும்.
இது இரண்டு நாட்கள் முதல் மூன்று வாரங்கள் வரை நீடிக்கும். இந்த வைரஸ் மலேரியா மற்றும் டைஃபாய்ட் போன்ற நோய்களையும் ஏற்படுத்தலாம்.
சமீபத்திய பரவலில் தொற்று உறுதிசெய்யப்பட்ட 58 பேரில், 19 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.