ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் தகுதிப் போட்டியில், ஸ்கொட்லாந்து அணியிடம் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவியுள்ளது.
ஹோபர்ட் மைதானத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முன்சே ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் மெக்லியோட் 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அல்சார்ரி ஜோசப் மற்றும் ஹோல்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஒடியன் ஸ்மித் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 18.3 ஓவர்கள் நிறைவில் 118 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், ஸ்கொட்லாந்து அணி 42 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ஹோல்டர் 38 ஓட்டங்களையும் கெய்ல் மேயர்ஸ் 20 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சில், மார்க் வாட் 3 விக்கெட்டுகளையும் பிரெட் வீல் மற்றும் லீஸ்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் டேவே மற்றும் செரீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதேவேளை இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற பயிற்சி போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.