22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க ஜனாதிபதியின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக தாம் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் திருத்தப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுப்பது பொருத்தமானது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், இந்தக் குழுவின் போது திருத்தங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.