கச்சின் சுதந்திர இராணுவம் என அறியப்படும் முக்கிய இன கிளர்ச்சிக் குழு நடத்திய கொண்டாட்ட நிகழ்வின் மீது மியன்மார் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் கச்சின் சுதந்திர இராணுவ உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100 பேர் காயமடைந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8:40 மணிக்கு கச்சின் சுதந்திர அமைப்பின் ஸ்தாபகத்தின் மூன்று நாட்கள் கொண்டாட்டத்தின் முதல் நாளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைப்பின் ஆயுதப் பிரிவான கச்சின் சுதந்திர இராணுவ உறுப்பினர்கள் இராணுவப் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தளத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இரண்டு மியன்மார் இராணுவ ஜெட் விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாகவும், கொண்டாட்டத்தின் மீது இராணுவ விமானம் நான்கு குண்டுகளை வீசியதாகவும் அங்கு இருந்த ஆயுத குழுவைச் சேர்ந்தவர்கள் கூறியதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிகழ்வில் 300 முதல் 500பேர் வரை கலந்து கொண்டனர், இறந்தவர்களில் ஒரு கச்சின் பாடகர் மற்றும் கீபோர்ட் பிளேயர் ஆகியோர் அடங்குவர்.