ஐ.நா. அமைப்பின் அலுவல் மொழிகளில் ஒன்றாக ஹிந்தியை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னதாக, ஹிந்தி மொழியை சர்வதேச அளவில் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறியிருந்த நிலையில், இந்த செய்தி வெளியாகியுள்ளது.
டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) 12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகள் குறித்த கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்ற பிறகு ஊடகங்களுக்கு கூறுகையில்,
”யுனெஸ்கோ அமைப்பில் ஹிந்தி மொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்படும் செய்தி அறிக்கைகளிலும் சமூக வலைதளப் பதிவுகளிலும் ஹிந்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக மத்திய அரசாங்கமும் யுனெஸ்கோ அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
அதே வேளையில், ஐ.நா. அமைப்பில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக்குவது அவ்வளவு எளிதானதல்ல. எனினும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐ.நா.-வின் அலுவல் மொழியாக ஹிந்தி இணைக்கப்படுவதற்கு சில காலம் ஆகும்” என கூறினார்.
12ஆவது உலக ஹிந்தி மாநாட்டை ஃபிஜி நாட்டில் உள்ள நாடி நகரில் அடுத்த ஆண்டு பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு, ரஷ்ய மொழி, ஸ்பானிஷ் மொழி, சீன மொழி ஆகியவை மட்டுமே தற்போது வரை ஐ.நா.-வின் அலுவல் மொழியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.