மும்பையில் 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான ஐ.நா. பாதுகாப்பு சபையின் பயங்கரவாதத் தடுப்பு மாநாடு கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘மும்பையில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலானது, சர்வதேச சமூகம் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல். அத்தாக்குதலில் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தோரை மட்டும் அடையாளம் தேடி பிடித்து, பயங்கரவாதிகள் கொலை செய்தனர்.
மும்பைத் தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது. இத்தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நாடுகளும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்’ என கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த சபையின் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்தியாவின் பதவிக்காலம் வரும் டிசம்பருடன் நிறைவடைகிறது.
ஐ.நா. பாதுகாப்பு சபையின் பயங்கரவாதத் தடுப்புக் குழுவின் தலைமைப் பொறுப்பையும் இந்தியாவே வகித்து வருகிறது. அக்குழுவின் சிறப்பு மாநாடு இம்முறை, முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகின்றது.