நாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்குவதற்கான யோசனையொன்றை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.
அரியானா மாநிலம் சூரஜ்குந்த்தில் அனைத்து உட்துறை அமைச்சர்களின் சிந்தனை முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இந்த முகாமில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநிலத்தின் பொறுப்பு, அதே நேரத்தில் இவை அனைத்தும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது. சட்டம் ஒழுங்கு ஒரு மாநிலத்துடன் கட்டுப்படவில்லை, குற்றச்சம்பவங்கள் தற்போது பல்வேறு மாநிலங்கள் இடையேயும், சர்வதேச அளவிலும் நடைபெறுகின்றன.
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பல்வேறு மாநிலங்களிலும் கிரிமினல்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், எனவே கிரிமினல்களை காட்டிலும் 10 மடங்கு அதிகமாக விழிப்புடன் செயல்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொலிஸ்துறையினருக்கு ஒரே மாதிரியான சீருடை தேவை. ஒரே நாடு ஒரே சீருடை என்பது பொலிஸ்துறைக்கு வழங்கக்கூடிய ஒரு யோசனைதான். இதை நான் உங்கள் மீது திணிக்க முயற்சிக்கவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருவங்கள்.
5, 50 அல்லது 100 ஆண்டுகளில் இந்த யோசனை நடைமுறைக்கு வரலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள். நாடு முழுவதும் உள்ள பொலிஸ்துறையின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
பொலிஸ்துறையைப் பற்றி நல்ல கருத்தைப் பேணுவது மிக முக்கியமானது. இங்கே உள்ள தவறுகள் கவனிக்கப்பட வேண்டும்.
பொலிஸ்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைத்து செயல்திறன், அதன் சிறந்த விளைவு மற்றும் சாமானியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சிறந்த முடிவுகளை அடைவதற்கு பொலிஸ்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மனித நுண்ணறிவை உருவாக்கும் நல்ல பழைய அமைப்புமுறையை பலப்படுத்தப்பட வேண்டும்’ கூறினார்.