பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ள மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்களுக்கான மெய்வல்லுனர் வதிவிட பயிற்சி முகாம் ஆரம்பமாகியுள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) அடம்பன் ம.வி. பாடசாலை விளையாட்டு மைதானத்தில், ஆரம்பமான குறித்த வதிவிட பயிற்சி முகாம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
குறித்த பயிற்சி முகாமில் கொழும்பு தேசிய மட்ட தரத்திலான 8 பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கி வருகின்றனர்.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெளின் ஆலோசனைக்கு அமைவாக நடைபெற்று வரும் வதிவிட பயிற்சி முகாமில், மன்னார் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பிறின்ஸ் லெம்பேட்,மன்னார் வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் பி.ஞானராஜ், மடு வலய உடற்கல்வி ஆசிரியர் ஆலோசகர் பீ.லீன் லெம்பேட் ஆகியோரின் நெறிப் படுத்தலுக்கு அமைவாக குறித்த வதிவிட பயிற்சி முகாம் இடம் பெற்று வருகிறது.
மாகாண மட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 12 வயது தொடக்கம் 20 வயதிற்குற்பட்ட வீரர்களுக்கு குறித்த பயிற்சி முகாம் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.