இலங்கையின் அரசியலமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதற்கு பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளை பொலிஸார் பயன்படுத்தக்கூடாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள அமைதிப் போராட்டத்திற்கு அனுமதி பெறுமாறு பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அறிவித்துள்ளதாகத் தெரிவித்து, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 77 வது பிரிவின்படி அமைதியான போராட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன என அந்த ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் அரசியலமைப்பு உண்மையில் நாட்டின் உச்ச சட்டமாகும் என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஆணைக்குழு பொலிஸ்துறையை எச்சரித்துள்ளது.
செப்டெம்பர் 28 ஆம் திகதி பொது பாதுகாப்பு அமைச்சருக்கு ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பொலிஸ்துறையினருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு நினைவூட்டியுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குழுவொன்றும் அமைதிப் பேரணியை கண்காணிக்கும் என அந்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.