அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று (புதன்கிழமை) கண்டனப் பேரணியும் பாரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டப்பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த பேரணி இன்று பிற்பகல் 03.00 மணிக்கு மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமாகி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.
இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்கவிருப்பதாக அறிவித்துள்ளன.
எனினும் இந்த போராட்டங்களைக் கைவிடுமாறு அரசாங்கத்தினாலும் பல்வேறு வர்த்தக அமைப்புகளாலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக அமைப்புகள் இந்த போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளன.
நாட்டின் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார விடயங்கள் மீட்சிக் காணும் சூழ்நிலையில், சர்வதேசத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவுள்ள தருவாயில் இந்த போராட்டமானது அவற்றை சீர்குலைக்கும் செயற்பாடாக அமையும் என்றும் அந்த அமைப்புகள் கூட்டறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளன.
அதேநேரம், இன்றைய போராட்டத்தில் தமது கட்சி இணைந்து கொள்ளாது என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும் நெருக்கடியான பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் தென்படும் வேளையில் இவ்வாறான போராட்டங்களை நடத்துவது பொருத்தமானதல்ல என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவெளை, மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் போது எதிர்ப்பு நடவடிக்கை எடுப்பதன் நோக்கம் தெளிவாக இல்லை என தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.