நாட்டுக்கு மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை குறித்து கொரோனா தொழில்நுட்ப வல்லுநர் குழு அரசாங்கத்திடம் பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ள அவர், சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளை பூஸ்டர் தடுப்பூசிகளாகப் பயன்படுத்த முடியாது என்பதால், மற்றொரு தடுப்பூசியைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பாக தொழில்நுட்பக் குழு ஆராய்ந்து மற்றொரு தடுப்பூசியை நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அது எப்போது சாத்தியம் என்பதை தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் பேரில் ஃபைசர் தடுப்பூசிகளின் காலாவதி திகதியை சுகாதார அமைச்சு நீட்டித்ததாக அவர் கூறினார்.
அதன்படி, ஃபைசர் தடுப்பூசிகளின் காலாவதித் திகதியின் மூன்று மாத கால நீடிப்பு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததாக அவர் தெரிவித்தார்.
ஃபைசர் தடுப்பூசி திட்டம் நிறுத்தப்பட்டு, சினோபார்ம் தடுப்பூசி இன்னும் செயற்பாட்டில் உள்ளது என்றும் ஃபைசர் தடுப்பூசியைப் போல சினோபார்ம் தடுப்பூசியில் போதுமான வலிமை இல்லாததால், அதற்கான தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சினோபார்ம் தடுப்பூசிகளை பூஸ்டர் தடுப்பூசிகளாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் மீண்டும் நாட்டில் பரவாமல் தடுக்க என்ன தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து தொழில்நுட்பக் குழு கூடி முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய கோவிட் மாறுபாடுகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு விவாதங்கள் உள்ளன. ஆனால் போதுமான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, பெரும்பாலான நாடுகள் சுகாதார வழிகாட்டுதல்களைத் தளர்த்துவது குறித்து முடிவுகளை எடுக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
எங்கள் சமூகத்தில் எங்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதுடன், கொரோனா இறப்புக்கள் அரிதாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் உலகம் மீண்டும் ஒரு கடுமையான மாறுபாட்டால் பாதிக்கப்படும் வரை பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.