பாடசாலைகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்களுக்கான ஆடையை மாற்றுவதற்கான பொறுப்பு கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், எக்காரணம் கொண்டும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஆடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.
அரச சேவையின் கெளரவத்தை பேணும் வகையில் அரச உத்தியோகத்தர்களுக்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தது.
பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிக விலை கொடுத்து சேலைகளை வாங்குவதில் சிக்கல் நிலவி வருவதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அத்தோடு, போக்குவரத்து சிரமம் காரணமாக ஆசிரியர்கள் பலர் சைக்கிள், மோட்டார் சைக்கிள்களில் பாடசாலைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எனவே, புடவை அல்லது ஒசரியைவிட எளிதான எளிய உடையை அணிவதன் மூலம் ஆசிரியர்களால் மாணவர்களை கையாள்வதில் திறமையாக செயற்பட முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.