பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ணத் தொடருக்கான, பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கும் பிரான்ஸ் அணியின் 25 பேர் கொண்ட விபரத்தை பயிற்சியாளர் டிடைர் டெஸ்சாம்ப்ஸ் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தார்.
கோல்காப்பாளர்கள்: ஹூகோ லோரிஸ், ஸ்டீவ் மன்டான்டா, அல்போன்ஸ் அரோலா
பின்களம்: லூகாஸ் ஹெர்னாண்டஸ், தியோ ஹெர்னாண்டஸ், பிரெஸ்னல் கிம்பெம்பே, இப்ராகிமா கோனேட், ஜூலஸ் கோண்டே, பெஞ்சமின் பவார்ட், வில்லியம் சலிபா, ரபெல் வரேன், டயோட் உபாமிகனோ
நடுகளம்: எடார்டோ கமாவிங்கா, யூசோப் போபனா, மேத்யூ கான்டோசி, அட்ரியன் ரபியாட், அரேலியன் சோவாமெனி, ஜோர்டன் வெரேட்டவுட்
முன்களம்: கரீம் பென்ஜிமா, கிங்ஸ்லி கோமன், ஓஸ்மானே டெம்பல், ஆலிவர் ஜிரார்ட், கிரிஸ்மேன், கைலியன் எம்பாப்பே, கிறிஸ்டோபர் குன்கு.
நடப்பு சம்பியன் பிரான்ஸ் அணி ‘டி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. 16ஆவது முறையாக உலகக் கிண்ணத் தொடரில் அடியெடுத்து வைக்கும் பிரான்ஸ் அணி 1998ஆம் மற்றும் 2018ஆம் ஆகிய ஆண்டுகளில் உலகக்கிண்ணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த முறை பிரான்ஸ் அணி உலகக் கிண்ணத் தொடரை வென்றால் தொடர்ந்து 2ஆவது முறையாக உலகக் கிண்ணத்தை வென்ற 3ஆ வது நாடு என்ற பெருமையை தன்வசப்படுத்தும். ஏற்கனவே இத்தாலி (1934, 1938), பிரேஸில் (1958, 1962) ஆகிய அணிகள் தொடர்ச்சியாக 2 தடவை உலகக் கிண்ணத்தை வென்றுள்ளன.
22ஆவது கால்பந்து உலகக்கிண்ணத் தொடர், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் டிசம்பர் 18ஆம் திகதி வரை கட்டாரில் நடைபெறவுள்ளது.
கட்டாரில் உள்ள டோஹா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது.
அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய வெளியேற்று சுற்றுப் போட்டி (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும்.