அவுஸ்ரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இருந்து துடுப்பாட்ட வீரர் கீகன் பீட்டர்சன் விலகியுள்ளதாக, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
29 வயதான கீகன் பீட்டர்சனுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீட்டர்சன் வார இறுதியில், நடைபெற்ற சி.எஸ்.ஏ ரி-20 இறுதிப் போட்டியின் போது காயம் அடைந்தார். மேலும் குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை தேவைப்படும் என மருத்துவக்குழு அறிவித்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான கீகன் பீட்டர்சன், கடந்த ஆண்டு கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் நியூசிலாந்திற்கான சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறினார்.
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான தொடரில், பீட்டர்சனுக்கு பதிலாக விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரி-20 உலகக்கிண்ணத்தை தவறவிட்ட ராஸ்ஸி வெண்டர் டுஸன் தெரிவுசெய்ய வாய்ப்புள்ளது.
தென்னாபிரிக்கா அணி, அடுத்தமாத நடுப்பகுதியில் அவுஸ்ரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்த தொடரின் முதல் போட்டி, டிசம்பர் 17ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகின்றது.
அவுஸ்ரேலியா தொடருக்கான அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்வு குழுவின் தலைவர் கன்வீனர் விக்டர் எம்பிட்சாங் உறுதிப்படுத்தினார்.
அதே சமயம் முழங்கை காயத்தால் இங்கிலாந்து தொடரை தவறவிட்ட டெம்பா பவுமா, ரியான் ரிக்கல்டன் மற்றும் காயா சோண்டோ ஆகியோர் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் இங்கிலாந்தில் கைவிடப்பட்ட ஹெய்டன் மார்கிரம் தொடரை தவறவிடலாம்.
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் போது, இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்ட கேசவ் மகாராஜின் மருத்துவப் புதுப்பிப்புக்காக அணி நிர்வாகம் காத்திருக்கின்றது. அவர் அணியில் இடம்பெறாத பட்சத்தில், சைமன் ஹார்மர் அணியில் சேர்க்கப்படலாம்.