வியட்நாம் கடற்பரப்பில் மீட்கப்பட்ட இலங்கையர்களுக்கு சர்வதேச புலம் பெயர்ந்தோர் அமைப்பு மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வியட்நாமிலுள்ள முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தாமாக முன்வந்து இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தால், அதற்கான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற மியான்மரின் மீன்பிடிக் படகு கடந்த திங்கட்கிழமை வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் கடற்பரப்பில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கரை ஒதுங்கியது.
இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக படகில் இருந்த ஒருவர் இலங்கை கடற்படைக்கு அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, வியட்நாம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா அரசாங்கங்களை தொடர்புகொண்டு குறித்த படகு தொடர்பான தகவல்களை இலங்கை பரிமாறிக்கொண்டது.
இதனையடுத்து, குறித்த படகுக்கு அருகில் பயணித்த ஜப்பானிய கப்பல் மூலம் இலங்கையர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.