வடக்கு மாகாணசபை கார்த்திகை மாதத்தை வடமாகாண மரநடுகை மாதமாக 2014ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. அதன் அடிப்படையில், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் கார்த்திகையில் மரநடுகை மாதத்தைச் சிறப்பாக கொண்டாடி வருவதோடு, மலர்க்கண்காட்சி ஒன்றையும் நடாத்தி வருகின்றது.
இவ்வருடமும் மரநடுகை மாதத்தைக் கொண்டாடும் வகையில் இம்மாதம் 18ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்முற்றம் காட்சித்திடலில் பிற்பகல் 3.00 மணிக்கு கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி திறந்து வைக்கப்படவுள்ளது.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி நா. சண்முகலிங்கன் அவர்கள் கலந்துகொள்கிறார்.
சிறப்பு விருந்தினர்களாகச் சமூகச் செயற்பாட்டாளர் திரு. ம. செல்வின் இரேனியஸ் அவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. ச. ரவி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இம்மலர்க்கண்காட்சியின் தொடக்க விழாவில் தங்களின் பங்கேற்பு இன்றியமையாததாக எங்களால் உணரப்படுகிறது. தங்களின் வருகை விழாவைச் சிறப்புடையதாக்கும் என்பதால் இவ்விழாவில் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.