குர்திஸ் பயங்கரவாதக் குழுக்களைக் குறிவைத்து சிரியா மற்றும் ஈராக்கில் துருக்கி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்தான்புல்லில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி என்ற பயங்கரவாதக் குழுவினர் இருக்கும் பகுதிகளையும், சிரியாவின் மேற்கு பிராந்தியத்தில் சிரியா மக்கள் பாதுகாப்புப் படை என்ற அமைப்பினர் இருக்கும் பகுதிகளையும் இலக்கு வைத்து எஃப்-16 போர் விமானங்கள் மூலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹூலுஸி அகாhர் கூறுகையில், ‘8.5 கோடி துருக்கி குடிமக்களையும் எல்லைகளையும் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். நாட்டின் மீது நடத்தப்படும் எந்தவித தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும். அந்த வகையில், பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள், ஆயுதக் கிடங்குகள் விமானத் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டன’ என கூறினார்.
ஆனால், இத்தாக்குதல் குறித்து அந்தக் குழுக்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
கடந்த 13ஆம் திகதி இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்ததோடு 80பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும், அதன் சிரியா பிரிவான சிரியா மக்கள் பாதுகாப்புப் படையும்தான் காரணம் என துருக்கி குற்றம்சாட்டியது. ஆனால், குர்திஸ் அமைப்பு அதை மறுத்தது.
துருக்கியில் 1984ஆம் ஆண்டுமுதல் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அமைப்பு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.