ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 13,000 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10,000 முதல் 13,000 துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறினார்.
உக்ரைன் உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிபரங்களை வழங்குவது அரிது, மேலும் பொடோலியாக்கின் கருத்துக்கள் அந்நாட்டு இராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை.
முன்னதாக, கடந்த ஜூன் மாதம் அவர் 100 முதல் 200 உக்ரைனிய வீரர்கள் தினமும் கொல்லப்படுவதாக கூறினர்.
கடந்த மாதம், மிக மூத்த அமெரிக்க ஜெனரல் மார்க் மில்லி, போர் தொடங்கியதில் இருந்து சுமார் 100,000 ரஷ்ய மற்றும் 100,000 உக்ரைனிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் எனக் கூறினார்.
கடந்த புதன்கிழமை ஒரு காணொளி உரையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 100,000 உக்ரைனிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக கூறினார். எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் பின்னர் இது ஒரு தவறான மதிப்பீடு என்று தெளிவுபடுத்தினார், மேலும் அந்த எண்ணிக்கை கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த இருவரையும் உள்ளடக்கியது என தெளிவுப்படுத்தப்பட்டது.