பிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தாய்வானுக்கு மேற்கொண்ட விஜயத்தை சீனா கடுமையாக கண்டனம் செய்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் தாய்வானுக்கு மேற்கொண்டுள்ள பயணம் ஒரு சீனா கொள்கையின் அப்பட்டமான மீறல் என்று பிரித்தானியாவில் உள்ள சீனத் தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரு சீனா கொள்கையை மீறும் எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தவும், சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்தவும், அதன் உறுதிப்பாட்டிற்கு இணங்குமாறு பிரித்தானியா தரப்பை சீனத் தரப்பு வலியுறுத்துகிறது.
சீனாவின் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பிரித்தானிய தரப்பின் நகர்வுகள் சீனத் தரப்பிலிருந்து பலமான பதில்களை எதிர்கொள்ளும். தாய்வான் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்புவோருக்கு இந்த பயணம் தவறான சமிக்ஞையை அனுப்பியுள்ளது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், சீன அறிக்கைக்கு பதிலளித்த குழுவின் தலைவர் அலிசியா கியர்ன்ஸ், ‘ஜனநாயகங்கள் ஒருவருக்கொருவர் உரையாடலில் ஈடுபடுவது முற்றிலும் சரியானது’ என்று கூறினார்.
அரசாங்கக் கொள்கையை ஆராயும் குழுவில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி மற்றும் ஸ்காட்டிஷ் தேசியவாதிகள் உள்ளனர்.
ஒரு ஜனநாயக சுயராஜ்ய தீவான தாய்வானை சீனா தனது சொந்த பிரதேசமாக உரிமை கோருகிறது மற்றும் தாய்வானை அடைய இராணுவத்தை பயன்படுத்துவதாக கூறுகின்றது. ஆனால், சீனாவின் இறையாண்மை கோரிக்கையை தாய்வான் நிராகரிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியதில் இருந்து பிரித்தானியா பொருளாதார மற்றும் இராஜதந்திர முன்னுரிமையாகக் கருதும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய வெளியுறவுக் கொள்கையில் கவனம் செலுத்தியுள்ளது.