கால்பந்து உலகக்கிண்ணத் தொடரை நடத்தும் கட்டாரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விசாரணையில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற அலுவலகங்களில் பெல்ஜிய புலனாய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
பெல்ஜியத்தில் வெள்ளிக்கிழமை முதல் நடத்தப்பட்ட 20ஆவது தேடுதல் நடவடிக்கை இதுவாகும்.
ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகிறது என நாடாளுமன்றத் தலைவர் ரொபர்ட்டா மெட்சோலா, ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்தார்.
இந்த விசாரணைகளின் போது, ஐரோப்பிய நாடாளுமன்ற துணைத் தலைவர் ஈவா கைலி, கிரேக்க ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெல்ஜிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் ஒரு குற்றவியல் அமைப்பில் பங்கேற்பது, பணமோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து தான் எந்த தவறும் செய்யவில்லை என கட்டார் மறுத்துள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஊழல் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) விவாதிப்பார்கள்.
சந்தேகத்திற்குரிய ஒருவரின் வீட்டில் சுமார் ஆறு இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள ரொக்கமும், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரின் குடியிருப்பில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் யூரோக்கள் மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஹோட்டல் அறையில் சூட்கேஸில் பல லட்சம் யூரோக்களும் கைப்பற்றப்பட்டதாக பெல்ஜிய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், இதன்போது கணனிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
விசாரணைக்குத் தேவையான தரவுகள் காணாமல் போவதைத் தடுக்க, வெள்ளிக்கிழமை முதல், 10 நாடாளுமன்ற ஊழியர்களின் தகவல் தொழில்நுட்ப வளங்கள் முடக்கப்பட்டுள்ளன.