லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின், 10ஆவது லீக் போட்டியில் லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
கண்டி- பல்லேகல மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியும் கொழும்பு ஸ்டார்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ஸ்டார்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய, லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சொயிப் மாலிக் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ மற்றும் சமரவிக்கிரம ஆகியோர் தலா 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு ஸ்டார்ஸ் அணியின் பந்துவீச்சில், ஹோவ்ல் 2 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் மற்றும் டொமினிக் ட்ரேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 179 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொழும்பு ஸ்டார்ஸ் அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், லைக்கா ஜப்னா கிங்ஸ் அணி, 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களையும் பென்னி ஹோவ்ல் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், வியாஸ்காந்த் மற்றும் ஜேம்ஸ் புல்லர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் திசர பெரேரா, மகேஷ் தீக்ஷன மற்றும் அசித்த பெனார்டோ ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, லைக்கா ஜப்னா கிங்ஸ் அணியின் ஜேம்ஸ் புல்லர் தெரிவுசெய்யப்பட்டார்.