அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணைக்குழு தொடர்பான இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என ஓ.பி.எஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
கடந்த ஜூலை 11ம் திகதி இரண்டாவதாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தனித்தனியாக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன்,‘‘இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் தங்களது பல்வேறு பணிகள் முடங்கியுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவும் கட்சி விதி மாற்றங்களையும் பதிவேற்றம் செய்ய மறுக்கிறது. எனவே இடைப்பட்ட காலத்தில் தேர்தல் எதுவும் அறிவிக்கப்பட்டால் பெரும் சிக்கல் ஏற்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார்,‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள தேர்தல் ஆணைக்குழு தொடர்பான இடைக்கால மனுவை விசாரிக்க கூடாது என கூறினார்.
இதில் வழக்குக்கு சம்பந்தப்பட்ட மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளை மட்டுமே நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 15ம் திகதிக்கு ஒத்திவைத்தனர்.