இரத்தினபுரி – இங்கிரிய பிரதான வீதியில் நம்பபான, கெட்டகெரெல்ல பாலத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 40க்கும் 50க்கும் இடைப்பட்ட வயதுடையவர் என தெரிவித்த பொலிஸார், இறந்தவரின் கைகள் பெல்ட் மற்றும் வெள்ளை வேட்டியால் அவரது முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்ததாகவும் அவரது வாயும் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட போது மேல் ஆடையின்றி இருந்த அவர், கறுப்பு காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் வேறொரு இடத்தில் கொல்லப்பட்டு இன்று காலை வனப்பகுதியில் சடலத்தை வீசியிருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு அருகில் மனித எலும்புகளின் சில துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்தமை குறிப்பிடத்தக்கது.