ஓமானில் வீட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறிய பெண்களுக்கு எதிரான பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஓமானிற்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனித கடத்தல் தொடர்பான 15 சம்பவங்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஓமான் பிரஜை ஒருவரால் வீட்டுப் பணிப்பெண் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குறித்த பெண் இலங்கைப் பிரதிநிதிகளால் சம்பந்தப்பட்ட நபருக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இரு வீட்டுப் பணியாளர்களை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமையுடன் இலங்கை துணை முகவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், வீட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரை மாடு, ஆடுகளை பராமரிக்க அனுப்பியமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சித்திரவதைக்கு உள்ளான வீட்டுப் பணியாளர்கள் குழு இன்னும் ஓமான் பாதுகாப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.