இஸ்ரேலின் வரலாற்றில் மத மற்றும் மிகவும் கடுமையான அரசாங்கம் பதவியேற்றுள்ளது.
நீண்ட இழுபறிக்கு பிறகு இஸ்ரேலின் பிரதமராக ஆறாவது முறையாக பெஞ்சமின் நெதன்யாகு நேற்று (வியாழக்கிழமை) பதவியேற்றார்.
73 வயதாகும் அவர், நாட்டில் மிக நீண்ட காலமாக பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை ஏற்கெனவே பெற்றுள்ளார்
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அமைக்கப்பட்ட அரசாங்கங்கள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. இந்த நிலையில், மூன்றே ஆண்டுகளில் 4ஆவதாக கடந்த நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் நெதன்யாகுவின் கட்சிக்கு 32 இடங்கள் கிடைத்தன.
ஆட்சிமைக்க 61 இடங்கள் தேவையான நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு தனது லிகுட் கட்சி தீவிர தேசியவாத மற்றும் தீவிர ஆர்த்தடாக்ஸ் யூத கூட்டாளிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கிய பின்னர், தற்போது பிரதமராகியுள்ளார்.
தற்போது அமைந்துள்ள அரசாங்கம்தான் நாட்டின் மிகத் தீவிர வலதுசாரிக் கூட்டணி அரசாங்கம் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த புதிய அரசாங்கம் எடுக்கக் கூடிய முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
இது பாலஸ்தீனியர்களுடனான மோதலைத் தூண்டிவிடும், நீதித்துறையை சேதப்படுத்தும் மற்றும் சிறுபான்மை உரிமைகளை கட்டுப்படுத்தும் என்று உள்நாட்டு மற்றும் சர்வதேசம் கவலை கொண்டுள்ளது.
ஆனால், நெதன்யாகு அமைதியைத் தொடரவும், சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஜெருசலேமில் நடைபெற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உரையாற்றிய அவர், தனது நிர்வாகம் இஸ்ரேல் குடிமக்களுக்கு ஆட்சி, அமைதி மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பை மீட்டெடுக்கும் என்று கூறினார்.
லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் விசாரணையில் இருக்கும் போது, அதிகமான தாராளவாதிகள் அவருடன் அரசாங்கத்தில் அமர மறுப்பதால், அவர் கடும்போக்குக் கட்சிகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.