பெலாரஸ் காலனியில் உக்ரைனிய வான் பாதுகாப்பு ஏவுகணையை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி, உக்ரைன் தூதரை பெலாரஸ் அழைத்துள்ளது.
இதுவரை உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்திய மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களின் போது, இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெலாரஷ்ய அரசாங்க தொலைக்காட்சியின் காட்சிகள், ஒரு வயலில் ஏவுகணை குப்பைகள் இருப்பதைக் காட்டியது.
உக்ரைன் இராணுவ செய்தித் தொடர்பாளர், இந்த சம்பவம் வான் பாதுகாப்பின் விளைவு என்று விபரித்தார்.
ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடான பெலாரஸ் – எஸ்-300 ரொக்கெட் எல்லைக்கு அருகில் விழுந்த பிறகு, உக்ரைன் முழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியது.
பெப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு பெலாரஸ் உக்ரைன் ஏவுகணையை சுட்டு வீழ்த்தியது இதுவே முதல் முறையாகும்.
உக்ரைனிய தூதர் மின்ஸ்கில் உள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டார். பெலாரஷ்யன் தரப்பு இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமானதாகக் கருதுகிறது’ என்று செய்தித் தொடர்பாளர் அனடோலி கிளாஸ் கூறினார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க விரிவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் உக்ரைனிடம் வலியுறுத்தினார்.
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், ரஷ்யாவின் பயங்கரவாத அரசாங்கத்தை ஆதரிக்காத நாடுகளின் நிபுணர்களை இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உதவ வேண்டுமென கூறியது, மேலும் தனது சொந்த வானத்தைப் பாதுகாப்பதற்கு உரிமையுள்ளது எனவும் கூறியது.