வணிக வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கும் மக்களுக்கு நிவாரணத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கடன் பெற்றவர்கள் கோரும் வகையில் கடன்களை செலுத்துவதற்கு வசதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள 43 இலட்ச குடும்பங்கள் அரசாங்கத்திடம் நிவாரண உதவியை கோரியுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வரி அறவிடல் ஊடாகவே நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார மட்டத்தில் உயர் நிலையில் உள்ள 10 சதவீதமானோரிடமிருந்து உதவிகளை பெற்று நடுத்தர அல்லது ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வரிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
அரச வருமானத்தை 14 சதவீதமாக தக்கவைத்துக் கொள்ள பெறுமதி சேர் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.