தாயகத்தில் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலையொட்டிக் குலைந்து போய் நிற்கும் ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பில் கனடாவில் வாழும் தமிழர்கள் ஒரு திருப்பகரமான வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.இலங்கைத் தீவின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக கனடா தடை விதித்திருக்கிறது.ஏற்கனவே அமெரிக்கா நாட்டின் தளபதிக்கு எதிராக தடை விதித்திருக்கிறது. அமெரிக்காவின் தடையோடு ஒப்பிடுகையில் கனடாவின் தடை பலமானது.அமெரிக்கா பயணத்தடை மட்டும்தான் விழித்திருக்கிறது. ஆனால் கனடா பயணத் தடையோடு சேர்த்து தடை விதிக்கப்பட்டவர்கள் கனடாவில் சொத்துக்களை வைத்திருப்பதை, முதலீடுகள் செய்வதை அல்லது கனடாவில் உள்ள முதலீட்டாளர்கள் மேற்படி முன்னாள் ஜனாதிபதிகளோடு தொடர்பு கொள்வதை தடை செய்கின்றது.
கனடா ஏற்கனவே குறிப்பிட்டுச் செல்லக்கூடிய இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது.தமிழர்கள் செறிவாக வாழும் ஒன்றாரியோ மாநில சட்டமன்றமும் கனேடிய மத்திய நாடாளுமன்றமும் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பாக இரு வேறு தீர்மானங்களை நிறைவேற்றின. அத்தீர்மானங்களின் அடுத்த கட்டமாக இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. நீதியைக் கோரும் ஒரு மக்கள் கூட்டத்தை பொறுத்தவரை இது ஒரு திருப்பகரமான முன்னேற்றம். அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டு பலமான நாடுகள் ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கு உற்சாகமூட்டும் சமிக்கைகளைக் காட்டியிருக்கின்றன.
மூத்த ராஜபக்ச சகோதரர்கள் இருவரும் இப்பொழுது பதவியில் இல்லை.ஆனாலும் அவர்களால் கட்டுப்படுத்தப்படும் ஒரு நாடாளுமன்றம்தான் நாட்டை இப்பொழுதும் நிர்வகிக்கின்றது.இந்த இரண்டு சகோதரர்களும் ஒற்றை யானையாக நாடாளுமன்றத்தில் நிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மறைவில் மீண்டும் பதவிகளுக்கு வராமல் தடுப்பதும் இத்தகைய தடைகளின் நோக்கங்களில் ஒன்று எனலாம். ரணில் விக்ரமசிங்க தன்னுடைய பதவியை பாதுகாப்பதற்காக இரண்டு ராஜபக்சக்களையும் மீண்டும் ஏதும் பொறுப்புகளில் அமர்த்தக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை தடையில் உண்டு. மேலும் கோட்டாபய ராஜபக்சவின் குடும்பம் அமெரிக்காவில் உள்ளது.இந்நிலையில் கனடாவை பின்பற்றி அமெரிக்காவும் முடிவெடுத்தால் அவர் தனது குடும்பத்தை அமெரிக்காவில் சென்று சந்திப்பதும் தடுக்கப்பட்டு விடும்
ஏற்கனவே குறிப்பிட்ட சில தளபதிகளுக்கு அவ்வாறு தடை உண்டு.அவர்கள் வெளிநாடுகளில் படிக்கும் தங்கள் பிள்ளைகளைச் சென்று சந்திக்க முடியாமல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மேற்படி தடைகள் மட்டும் ஈழத் தமிழர்களுக்கு மீட்சியைப் பெற்று தராது.ஆனால் இத்தடைகள் நீதிக்கான ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு உற்சாகமூட்டக் கூடியவை.கனடாவின் தடை விதிக்கப்பட்ட நால்வரில் இருவர் முன்னாள் ஜனாதிபதிகள்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஏனைய இருவரும் படைத்தரப்பைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மிருசுவில் கொலை வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்க்கப்பட்டவர். மற்றவர் ரவிராஜின் கொலை வழக்கு,கொழும்பில் மாணவர்கள் காணாமல் போனமை போன்ற வழக்குகளோடு சம்பந்தப்பட்டவர்.
இதில் மிருசுவில் படுகொலையில் குற்றவாளியாக காணப்பட்ட சுனில் ரட்னாயக்காவை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய தனது பதவிக்காலத்தில் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.அதாவது இலங்கையின் அரசுத் தலைவர் ஒருவரால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஒருவரை கனடா குற்றவாளி என்று கூறி தன் நாட்டுக்குள் வருவதற்கும் முதலீடு செய்வதற்கும் சொத்துக்களை வைத்திருப்பதற்கும் தடை விதித்திருக்கிறது. இதன் மூலம் நாட்டின் மிக உயர் நிறைவேற்று அதிகாரத்தை கொண்ட ஒருவர் வழங்கிய பொது மன்னிப்பை கனடா நிராகரித்து இருக்கிறது.
மேலும் இத்தடை குறித்த அறிவிப்பில் 1983 இல் இருந்து 2009 வரையிலுமான காலப்பகுதியில் இழைக்கப்பட்ட குற்றங்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.இதன் மூலம் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் குற்றங்கள் புரிந்த எல்லாத் தரப்புக்களும் பொறுப்பு கூற வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை கனடா ஏற்படுத்தியிருக்கிறது.
இத்தடைகளுக்காக பல ஆண்டுகள் உழைத்ததாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழருமான ஹரி ஆனந்தசங்கரி கூறியிருக்கிறார். அமெரிக்கா,கனடா ஆகிய நாடுகளைப் பின்பற்றி ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த நாடுகளும் தடைகளை விதிக்குமாறு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.கனடாவில் 3 லட்சத்துக்கும் குறையாத ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகிறார்கள். இந்தத் தொகை 5 லட்சம் வரை வரும் என்று உத்தியோகப்பற்றற்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் அதிக தொகை மக்கள் வாழும் நாடு கனடா தான். கனேடியத் தமிழ் சமூகம் நாடாளுமன்றத்திற்கு தமது பிரதிநிதிகளை அனுப்பும் அளவுக்குச் செறிவாகக் காணப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் முலோபாய கொள்கைவகுப்பு வட்டாரங்களுக்குள் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு வளர்ச்சியை படிப்படியாக பெற்று வருகிறது.
இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள கொள்கை வகுப்பாளர்களின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரு வளர்ச்சியை தமிழ் மக்கள் பெறுவார்களாக இருந்தால்,நீண்ட எதிர்காலத்தில் நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் மேலும் முன்னேற இடம் உண்டு.
கனடாவின் மேற்படி தடைகள் அமெரிக்காவின் தடைகளோடு ஒப்பிடுகையில் பலமானவை. அதே சமயம் அமெரிக்காவின் தடைகள் இப்பொழுது பதவியில் இருக்கும் ஒரு தளபதிக்கு எதிரானவை. கனடாவின் தடைகள் பதவி இழந்த இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிரானவை. உலகில் போர்க் குற்றம் சாட்டப்பட்ட பல தலைவர்கள் பதவி இழந்த பின்னர்தான் விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள். கம்பூச்சியாவிலும் ஆபிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் அதற்கு முன்னுதாரணங்கள் உண்டு.
நிலை மாறுகால நீதி என்பது பொதுவில் தோற்றவர்களை விசாரிக்கும் ஒரு பொறிமுறைதான்.2015ல் நிலைமாறு கால நீதிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது ராஜபக்சக்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டிருந்தார்கள். எனினும் ராஜபக்சக்களைத் தோற்கடித்து வெற்றி பெற்ற நல்லாட்சி என்று அழைக்கப்படுகின்ற ரணில்+மைத்திரி அரசாங்கம் மறைமுகமாக போர் வெற்றியையும், வெற்றி நாயகர்களையும் பாதுகாத்தது. இப்பொழுதும் நிலைமை அப்படித்தான். ராஜபக்சக்கள் தங்கள் சொந்த மக்களால் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு நிலையில் அவர்களைப் பாதுகாக்க ஒற்றை யானையாகிய ரணில் இருக்கிறார்.
அவர் ராஜபக்சக்களையும் பாதுகாப்பார் அதோடு கனடாவின் தடையை வைத்து ராஜபக்சக்களின் மீதான தனது பிடியை மேலும் இறுக்கிக் கொள்வார். அதாவது மேற்படி தடைகள் அவற்றின் தர்கபூர்வ விளைவுகளை பொறுத்தவரை ரணிலுக்குச் சாதகமானவை.
அதே சமயம் இதில் ராஜபக்சங்களுக்கும் ஒரு நன்மை உண்டு. உள்ளூர் தேர்தல்களில் அவர்களின் வாக்கு வங்கியை இது பாதுகாக்கும், பலப்படுத்தும். நாட்டுக்காக வீரமாகப் போராடிய சகோதரர்களை தமிழர்கள் வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து தண்டிக்கப் பார்க்கிறார்கள் என்று நம்பும் சிங்களப் பொதுசனம் ராஜபக்சங்களுக்கு மீண்டும் வாக்குகளை அள்ளிக் கொடுக்க முடியும். அதாவது இத்தடை ஒருபுறம் ராஜபக்ச குடும்பத்தை அனைத்துலக அளவில் அவமதிப்பது. அவர்களுடைய அந்தஸ்தை குறைப்பது. அவர்களுடைய போக்குவரத்து நடமாட்டங்களை கட்டுப்படுத்துவது. அவர்களுடைய முதலீட்டு வாய்ப்புகளை குறைப்பது. அதேசமயம் இன்னொரு பக்கம் உள்ளூரில் அவர்களை,அவர்களுடைய வாக்கு வங்கியை அது பாதுகாக்கும்.
நாட்டில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் ஒரு தேர்தலை வைத்தால் அது ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை விசப்பரீட்சையாகவும் அமையலாம். ஒரு தேர்தலில் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை என்பது வெளித்தெரியவந்தால் அரசாங்கம் மேலும் பலவீனமடைந்து விடும். எனவே அப்படி ஒரு அமில பரிசோதனையில் இறங்க ஜனாதிபதி தயாரா என்றும் பார்க்க வேண்டும். சில சமயம் தேர்தல் நடந்தால், அதில் ராஜபக்ச குடும்பத்தின் வாக்கு வங்கியை பாதுகாப்பதற்கு கனடாவின் மேற்படி தடைகளும் ஒரு காரணமாக அமையும்.
இலங்கைத் தீவின் துயரம் அதுதான்.தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்று தரக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் சிங்கள மக்கள் மத்தியில் யுத்த வெற்றி நாயகர்களைப் பலப்படுத்தும் என்பது.