பெங்களூர் அருகே உள்ள சிக்கபல்லாபூரில் இந்தியாவின் இரண்டாவது ஆதியோகி திருவுருவத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்துள்ளார்.
இதன் திறப்பு விழா ஈஷா யோகா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர் முன்னிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆதியோகிக்கு முன்பாக, யோகேஸ்வர லிங்கத்தை, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார்.
ஆதியோகி திருவுருவம் திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, ஆதியோகி, சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாற்றை 3டி ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கும் கண்ணை கவரும், ‘ஆதியோகி திவ்ய தரிசனம்’ நிகழ்ச்சியும் நடைபெற்றது.
மேலும், ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் சவுண்ட்ஸ் ஆப் ஈஷா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முன்னதாக, ஆதியோகி சிலைக்கு முன்பாக, சக்திவாய்ந்த யோகேஸ்வர லிங்கத்தை சத்குரு பிரதிஷ்டை நடைபெற்றது. இதற்கு முன்பு, கடந்த ஒக்டோபர் மாதம் அங்கு நாக பிரதிஷ்டை நடைபெற்றது. மக்களின் ஆன்மிக வளர்ச்சிக்காக சிக்கபல்லாபுரத்தில் உருவாக்கப்பட்டுள்ள சத்குரு சந்நிதியில், ஆதியோகி மட்டுமின்றி, கோவை ஈஷா யோகா மையத்தில் இருப்பதை போன்று லிங்க பைரவி, இரண்டு தீர்த்த குண்டங்கள், ஈஷா சம்ஸ்கிரித பாடசாலை, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகிய கட்டமைப்புகளும் படிப்படியாக உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை ஈஷா யோகா மையத்தில், கடந்த 2017ஆம் ஆண்டு, 112 அடி உயர ஆதியோகி திருவுருவத்தை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த ஆதியோகி திருவுருவம், உலக அளவில் மிகப்பெரிய மார்பளவு சிலை என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றது.