தேர்தல் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்த அதிகாரிகளில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அதிகாரிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அவர்கள் சுயாதீனமான முறையில் செயற்பட இடமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, இவ்வாறான சம்பவம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்க அரசாங்கம் மறைமுக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நேற்றிரவு முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.