இந்தியாவின் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் முன்னணி இணையவழி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேஸான் களமிறங்கியுள்ளது.
‘அமேஸான் எயார்’ என்ற பெயரில் இந்தச் சேவையை நிறுவனம் நேற்று (திங்கள்கிழமை) ஆரம்பித்தது.
இதன்மூலம் இந்தியாவில் விமான சரக்குப் போக்குவரத்துத் துறையில் களமிறங்கியுள்ள முதல் இணையவழி வர்த்தக நிறுவனம் என்ற பெருமையை அமேஸான் பெற்றுள்ளது.
ஹைதராபாதிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அருகே இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா தொழில் துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் கலந்து கொண்டு இந்தச் சேவையைத் ஆரம்பித்து வைத்தார்.
தற்போது இந்தச் சேவையில் 2 விமானங்கள் ஈடுபடுத்தப்படுவதாகவும், ஒவ்வொரு விமானத்திலும் ஒரே நேரத்தில் 20,000 பொருள்களை எடுத்துச் செல்ல முடியும் என அமேஸான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டு செயற்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனமான அமேஸான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் முதல் முறையாக விமான சரக்குப் போக்குவரத்து சேவையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.