அரச வைத்தியசாலைகளில் குறைந்தது 140 வகையான அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாடு தற்போது நெருக்கடியாக மாறியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மருந்துகள், மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் பரிசோதனையில் தாமதம் ஆகியவை மருத்துவமனைகளில் நோயாளிகளை பல ஆபத்துகளுக்கு தள்ளியுள்ளன என மருத்துவ சங்கங்கள் விளக்குகின்றன.
வலிநிவாரணிகள், பிரசவத்திற்குப் பின் அதிக இரத்த இழப்பைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள், இரத்தக் கசிவுக்கான மருந்துகள், இன்சுலின் மற்றும் மயக்க மருந்துகள் உள்ளிட்டவற்றிற்கே இவ்வாறு தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தென் மாகாண இணைப்பாளர் வைத்தியர் உபய பண்டார வரகாகொடவினால் பட்டியலிடப்பட்டுள்ளது.
பொது காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகள் கூட அரசாங்க வைத்தியசாலைகளில் கிடைக்காது என திடுக்கிடும் தகவல் ஒன்றினை வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியர் விஜேசிங்கவினால் பட்டியலிடப்பட்ட Cetirizine, Paracetamol, சுவாசக் கோளாறிற்கு பரிந்துரைக்கப்படும் அடிப்படை மருந்துகள், எளிமையான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் வலிநிவாரணிகள் ஆகியவை பற்றாக்குறையாக உள்ள மருந்துகளில் அடங்கும்.
“புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளை எங்கும் காண முடியாது. நாங்கள் முற்றிலும் அநாதரவாக உள்ளோம்” என தென் மாகாணத்தின் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு சென்ற நபர் ஒருவர் கதறி அழுத காட்சிகளும் வெளியாகியிருந்தன.
“இங்கே மருந்துகள் இல்லை. மருந்தகங்களில் மருந்துகளை வாங்குவதற்கு மருந்து சீட்டு கொடுக்கிறார்கள், ஆனால் எங்களிடம் போதிய பணம் இல்லை” என அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்ற பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனியார் மருந்தக நடத்துனர்களும் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அகில இலங்கை மருந்து விநியோகஸ்தர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.