2024ஆம் ஆண்டு பரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் ரஷ்யாவை போட்டியிட அனுமதிப்பது பயங்கரவாதத்தை எப்படியாவது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதைக் காட்டுவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடியதாக அவர் மேலும் கூறினார்.
ஒலிம்பிக் போட்டிகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்த ரஷ்யா அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச ஒலிம்பிக் ஆணையம், ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் நடுநிலையாளர்களாக போட்டியிடலாம் என்று கூறியுள்ளது.
ஆனால், ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் போட்டியிட அனுமதித்தால் 2024 பரிஸ் போட்டியை புறக்கணிப்பதாக உக்ரைன் மிரட்டல் விடுத்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது இரவு நேர உரையில், ‘ரஷ்ய விளையாட்டு வீரர்களை மீண்டும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு கொண்டு வர சர்வதேச ஒலிம்பிக் ஆணையம், மேற்கொண்ட முயற்சிகள், பயங்கரவாதம் எப்படியாவது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை உலகம் முழுவதும் சொல்லும் முயற்சியாகும்.
ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு அல்லது அதன் அரச பேரினவாதத்திற்கான பிரச்சாரமாக விளையாட்டுகளை அல்லது வேறு எந்த விளையாட்டு நிகழ்வையும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது’ என கூறினார்.