பயங்கரவாதத்தின் மையம் இந்தியாவுக்கு அருகிலேயே அமைந்துள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர் அலெக்சாண்டர் ஷால்லென்பெர்க்குடன் ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெய்சங்கர், பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல்கள் குறித்து ஆஸ்திரிய தலைவர்களுடன் பேசியதாக கூறினார்.
‘எல்லை தாண்டிய நடைமுறைகள், வன்முறை தீவிரவாதம், தீவிரவாதம் மற்றும் அடிப்படைவாதம் உள்ளிட்ட பயங்கரவாதத்தால் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து நாங்கள் விரிவாக பேசினோம்.’ என்று அவர் குறிப்பிட்டார்
‘பயங்கரவாதத்தின் விளைவுகள் ஒரு பிராந்தியத்திற்குள் குறிப்பாக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆயுத வர்த்தகம் மற்றும் பிற சர்வதேச குற்றங்களுடன் ஆழமாக இணைக்கப்பட்டிருக்கும் போது கட்டுப்படுத்த முடியாது.
இந்த மையம் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்திருப்பதால் இயற்கையாகவே நமது அனுபவங்களும் நுண்ணறிவுகளும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் இராணுவ மோதல் குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், உக்ரைன் நிலைமை குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இந்த சகாப்தம் போர்க்காலம் அல்ல என்ற பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டை எதிரொலிக்கும் வகையில், பேச்சுவார்த்தை மேசையில் உள்ள வேறுபாடுகளைத் தீர்க்க நாம் அழைப்பு விடுத்து வருகின்றோம் என்றார்.
அத்துடன், ரஷியா மற்றும் உக்ரைன் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இந்தியாவின் கருத்தை வலியுறுத்தி வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
இதேவேளை, இந்தியா மற்றும் ஆஸ்திரியா இடையேயான ஒப்பந்தங்கள் குறித்து ஜெய்சங்கர் கூறும்போது, ‘நாங்கள் பல ஒப்பந்தங்களை செய்துள்ளோம். விரிவான இடம்பெயர்வு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தத்தின் துவக்கம் என்பன குறிப்பிடத்தக்கவை என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இது திறமைகளுக்கான கோரிக்கைகளை அவற்றின் கிடைக்கும் தன்மையுடன் ஒத்திசைக்க உதவும் என்றார்.