பாகிஸ்தானின் குவாதர் உரிமைகள் இயக்கத்தின் தலைவர் மௌலானா ஹிதாயத் உர் ரஹ்மான், குவாதார் துறைமுகப் பகுதியை விட்டு வெளியேறுமாறு சீனப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்ததாக தி மரைடைம் எக்சிகியூட்டிவ் தெரிவித்துள்ளது.
குவாதரில் வசிக்கும் சீனப் பிரஜைகள் மற்றும் அவர்களது அரசாங்கம் எமது அமைதியான போராட்டங்களை புறக்கணித்தால் பங்கேற்பாளர்களுக்கு எங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு உரிமை உண்டு என்றும் அவர் எச்சரித்தார்.
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத குழுக்களிடமிருந்து சீன குடிமக்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர், அண்மைக்காலமாக சீன குடிமக்கள் மீதான இலக்கு தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
குவாதரில் வளர்ந்து வரும் சீன எதிர்ப்பு உணர்வு முக்கிய திட்டங்களின் முன்னேற்றத்தை மோசமாக பாதிக்கலாம் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குவாதர் உரிமைகள் இயக்கத்துடன் இணைந்த ரெஹ்மான் தலைமையில் சுமார் இரண்டு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. குவாதரின் துறைமுக நுழைவாயிலையும், பாகிஸ்தானின் முக்கிய நெடுஞ்சாலை வலையமைப்புடன் துறைமுகத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக குவாதர் ஈஸ்ட் பே எக்ஸ்பிரஸ்வேயையும் தடுப்பதே போராட்டங்களில் நோக்கமாக உள்ளது.
அதேநேரம், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பலுசிஸ்தானின் கடல் எல்லைகளில் சட்டவிரோத இழுவை உடனடியாக தடை செய்ய வேண்டும், காணாமல் போன பலூச் மக்களை மீட்டெடுக்க வேண்டும், தேவையற்ற பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை மூட வேண்டும், சீன குடிமக்களுக்கு மேல் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், ஈரானுடனான எல்லை வர்த்தகத்தில் அதிகபட்ச சலுகைகள் மற்றும் போதைப் பொருட்களை நிறுத்த வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், ஈரானுடனான முறைசாரா எல்லை வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் விரும்புகின்றனர். இந்த கோரிக்கைகள் குவாதரில் உள்ள சீன திட்டங்களுடன் நேரடியாக இணைக்கப்படவில்லை என்றாலும், பல உள்ளுர்வாசிகள் சீனாவின் வருகையே பிரச்சினையின் ஒரு பகுதியாக இருப்பதாக வாதிடுகின்றனர்.
கடந்த ஆண்டு, ரெஹ்மான் 32 நாட்களுக்கும் மேலாக இதேபோன்ற போராட்டங்களை நடத்தினார். அவர் எழுப்பிய கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதாக அரசாங்கம் உறுதியளித்ததையடுத்து அவர் நடவடிக்கையை கைவிட்டார், ஆனால் அவை தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், சீன பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ரெஹ்மானின் முடிவு, பாகிஸ்தான் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
2021ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் சீன நாட்டவர்கள் தீவிரவாத தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். இதனையடுத்து பீஜிங் தனது குடிமக்களுக்கு பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க இஸ்லாமாபாத்திற்கு அழுத்தம் கொடுத்தது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கடந்த மாதம் பீஜிங்கிற்குச் சென்றபோது, பாகிஸ்தானில் உள்ள சீனர்களின் பாதுகாப்பு பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.