4,300க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தப்பிப்பிழைத்தவர்களைத் தேடுவதற்கு உதவ பிரித்தானிய தேடல் மற்றும் மீட்பு நிபுணர்கள் துருக்கிக்குச் சென்றுள்ளனர்.
76 மீட்புக்குழுவினர் நேற்று (திங்கள்கிழமை) மாலை துருக்கிக்கு சென்றதாக அறியமுடிகின்றது.
7.8 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள், துருக்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளை அழித்தன, உலுக்கிய நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரித்தானியாவில் உள்ள துருக்கிய சமூகத்தினர் திங்கள்கிழமை அதிகாலை முதல் உதவிகளை அனுப்பி வருகின்றனர்.
வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, நிலநடுக்கங்களின் தாக்கம் ‘முன்னெப்பொழுதும் காணாத அளவில் உள்ளது என விபரித்தார்.
மேலும், பேரழிவில் இதுவரை பிரித்தானியர்கள் யாரும் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை என்று மேலும், கூறினார்.
துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு எண்ணிக்கை 4,300ஆக உயர்ந்துள்ளது, மேலும் பல பகுதிகளில் பனிமூட்டமான காலநிலையில் இடிபாடுகளில் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகின்றது.