நியூஸிலாந்தின் வடக்கே தாக்கிய கேப்ரியல் புயலால் சுமார் 58,000 வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்து அங்கு கனமழை மற்றும் காற்று வீசும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர், நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேப்ரியல் புயல், வடக்கு தீவுக்கு அருகில் நிலைக்கொண்டிருப்பதால், சில பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்லாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஏற்பட்ட வெள்ளத்தால் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் வரலாற்றில் மூன்றாவது தடவையாக தேசிய அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவசரகால முகாமைத்துவ அமைச்சர் கீரன் மெக்அனுல்டி தெரிவித்தார்.
ஆக்லாந்து உட்பட ஐந்து வடக்கு பிராந்தியங்களில் ஏற்கனவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உள்ளூர் அதிகாரிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க அதிக அதிகாரத்தை அளிக்கிறது மற்றும் பயணத்தை கட்டுப்படுத்தவும் உதவிகளை வழங்கவும் அனுமதிக்கிறது.
ஆக்லாந்தின் வடக்கே உள்ள நகரமான வாங்கரேயில் கடந்த 12 மணி நேரத்தில் 100.5 மிமீ (4 அங்குலம்) மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு நிறுவனம் மெட்சர்வீஸ் தெரிவித்துள்ளது.