முதல்முறையாக நடைபெற்ற சர்வதேச ரி-20 லீக் தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, கல்ப் ஜியண்ட் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஆறு அணிகள் பங்கேற்ற இத்தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) டுபாயில் நடைபெற்றது. இப்போட்டியில், கல்ப் ஜியண்ட் அணியும் டெசர்ட் வைப்பர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கல்ப் ஜியண்ட் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெசர்ட் வைப்பர்ஸ், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 55 ஓட்டங்களையும் பிலிங்ஸ் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கல்ப் ஜியண்ட் அணியின் பந்துவீச்சில், கார்லோஸ் பிரத்வெயிட் 3 விக்கெட்டுகளையும் கைஸ் அஹமட் 2 விக்கெட்டுகளையும் கிராண்ட்ஹோம் மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 147 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கல்ப் ஜியண்ட் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், கல்ப் ஜியண்ட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கிறிஸ் லின் ஆட்டமிழக்காது 72 ஓட்டங்களையும் ஜெராட் எரஸ்மஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெசர்ட் வைப்பர்ஸ் அணியின் பந்துவீச்சில், லுக் வுட், டொம் கர்ரன் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 3 விக்கெட்டுகளை சாய்த்த கார்லோஸ் பிரத்வெயிட் தெரிவுசெய்யப்பட்டார்.