நாட்டின் வடக்கில் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய மற்றும் சில நகரங்களை துண்டித்த கேப்ரியல் சூறாவளிக்குப் பின்னர் போராடி வரும் நியூஸிலாந்து, சர்வதேச உதவிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் உதவிகளை அறிவித்த பிறகு, பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் சர்வதேச உதவிகளை ஏற்பதாக கூறியுள்ளார்.
மேலும், மீட்பு பணிகள் தாமதம் ஆகலாம் எனவும் சில பகுதிகளுக்கு பல வாரங்களுக்கு மின்சாரம் மீட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தங்களால் முடிந்தவரை விரைவாக உள்கட்டமைப்பை மீட்டெடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மக்கள் தொடர்பு கொள்ள இயலாமை ஒரு உண்மையான பிரச்சினை என்றும், உடனடியாக இணைப்பை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் ஹிப்கின்ஸ் கூறினார்.
நான்கு நாட்களாக பலத்த காற்று மற்றும் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் 10,500 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூஸிலாந்து தற்காப்புப் படை, இரண்டு பெரிய கப்பல்கள் மற்றும் சி-130 ஹெர்குலிஸ் போக்குவரத்து விமானம் மூலம் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை பணியாளர்கள் மற்றும் பல நடமாடும் நீர் சுத்திகரிப்பு ஆலைகளுடன் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்க உள்ளது.
மேலும், ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி பொருட்களை வழங்கவும், அவர்களின் கூரைகளில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் 5 மில்லியன் குடியிருப்பாளர்களில் சுமார் 75 சதவீதம் பேர் வசிக்கும் நியூஸிலாந்தின் வடக்குத் தீவின் பகுதிகள், பல வாரங்களில் இரண்டாவது பெரிய புயலைத் தாங்கிக் கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழையால் ஆக்லாந்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்தனர்.