ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெற்று வரலாற்றில் முதல்முறையாக தென்னாபிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கேப் டவுணில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், தென்னாபிரிக்கா அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டஸ்மின் பிரிட்ஸ் 68 ஓட்டங்களையும் வால்வார்ட் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும் லோரன் பெல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து, 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், தென்னாபிரிக்கா அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தென்னாபிரிக்கா, ஐ.சி.சி.யின் முக்கியத் தொடரொன்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் சந்தர்ப்பமாகவும் தனது பெயரை பதிவுசெய்தது.
இங்கிலாந்து அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நாட் ஸ்கிவர்-பிரண்ட் 40 ஓட்டங்களையும் டேனியல் வியாட் 34 ஓட்டங்களையும் பதிவுசெய்தனர்.
தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில், அயபோங்க காக்கா 4 விக்கெட்டுகளையும் ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட்டுகளையும் நாடின் டி கிளார்க் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகியாக, 55 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 6 பவுண்ரிகள் அடங்களாக, 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டஸ்மின் பிரிட்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.