இலங்கை இந்திய மீனவர்களிடையே நீடித்துவரும் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை, கச்சத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்புக்கும் இடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை மடியினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வருபவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விடமாட்டோம் எனவும் எமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கப்படாவிடில் அமைச்சரதும் துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் எனவும் கூறினர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடலை நிறைவுக்கு கொண்டுவந்தார்.
கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.